உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா வைரஸ் முதல்முதலில் சீனாவின் வூஹான் பகுதியில்தான் பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் வௌவால்களிலிருந்து பாங்கோலின் என்ற விலங்குக்கு பரவி அதை உட்கொண்டதன் மூலம் மனிதர்களுக்கு பரவியதாகவே இதுவரை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இந்த வைரஸ், பரிசோதனை மையம் எனப்படும் லேபிலிருந்து வெளியேறியதா என்ற கோணத்திலும் பலர் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர். சீனாவின் வூஹான் பகுதியில் உள்ள வைரஸ் பரிசோதனை மையத்திலிருந்துதான் இந்த வைரஸ் வெளியேறியதாக அமெரிக்க ஊடகங்கள் நடத்திய புலன் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர் சந்திப்பின்போது பேசுகையில், ”வௌவால்களிலிருந்து வைரஸ் பரவியதாகக் கூறப்படுகிறது. ஆனால் வைரஸ் தோன்றிய பகுதியிலிருந்து 40 மைல் தொலைவிற்கு வௌவால்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருக்க பரிசோதனை மையத்திலிருந்துதான் வைரஸ் பரவியதா என்ற கோணத்தில் விசாரித்துவருகிறோம்” என்றுள்ளார்.
அத்துடன் வூஹான் பரிசோதனை மையத்திற்கு அமெரிக்கா சார்பில் வழங்கப்படும் நிதி நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கரோனா தடுப்பிற்காக பெல் நிறுவனத்துடன் கை கோர்த்த எய்ம்ஸ் நிறுவனம்