நியூயார்க் நகரைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் தனியார் சட்ட நிறுவனம் 'குரூப்மென் ஷிரே மெய்செலஸ் அண்ட் சேக்ஸ்'. பிரபல ஹாலிவுட் நடிகர்கள், பாடகர்கள், இயக்குநர்கள் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில், குரூப்மென் ஷிரே நிறுவனத்தின் இணையத்தை ஊடுருவி 756 ஜிகா பைட் அளவிலான தரவுகளை தாங்கள் திருடிவிட்டதாகவும், அதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு எதிரான ஆதாரமும் சிக்கியுள்ளதாகவும், அதனை வெளியிடாமல் இருக்க வேண்டுமெனில் 42 மில்லியன் டாலர் ( சுமார் 318 கோடி ரூபாய்) பணத்தைக் கொடுக்க வேண்டும் என ரீவில் (REvil) என்ற ஹேக்கர் கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த ஹேக்கர் கும்பல் இணையத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அடுத்ததாக டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிரான ஆதாரங்களை வெளியிடுவோம். தேர்தல் சூடுபிடித்து வரும் இந்த வேளையில், இது எங்கள் கையில் சிக்கியுள்ளது. வாக்காளர் பெருமக்களே, நீங்கள் அவரை மீண்டும் அதிபராகப் பார்க்க விரும்பவில்லை என்பது எங்களுக்குத் தெரியும்.
பணம் தரவில்லை என்றால், குரூப்மேன் நிறுவனத்தை அழித்து தரைமட்டமாக்கி விடுவோம்" என எச்சரித்துள்ளனர். ஆனால், அதனை உறுதி செய்ய அவர்கள் எந்த ஆதராத்தையும் வெளியிடவில்லை.