அமெரிக்காவில் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தல் விவாதத்தின் போது ஜனநாயகக் கட்சியின் தற்போதைய அதிபர் வேட்பாளரான ஜோ பிடனை அவரது சகப் போட்டியாளரும், தற்போதைய துணை அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் கடுமையாக விமர்சித்தார்.
வெள்ளை இனத்தவரான ஜோ பிடனிடம் அங்குள்ள பள்ளிகளில் கறுப்பின மாணக்கர்கள் சந்திக்கும் நிற வேறுபாட்டை களைவது எப்படி என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தன்னையே, இதற்கு முன்னுதாரமாக வைத்து பேசினார். கறுப்பின மாணவர்கள் சந்திக்கும் சமூக பொருளாதார சிக்கலை மையமாகக் கொண்டே அவரது பேச்சு அமைந்தது.
ஜோ பிடனுடனான போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக கடந்த ஜனவரி மாதம் கமலா ஹாரிஸ் அறிவித்தார். இருப்பினும், அவர் போட்டியில் களம் கண்டதே அமெரிக்க ஜனநாயக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகப் பார்க்கப்படுகிறது. தற்போது சகப்போட்டியாளராக இருந்த ஜோ பிடனே அவரை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
ஜமைக்க நாட்டைச் சேர்ந்த டொனால்ட் ஹாரிஸ் என்பவருக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷியமளா கோபாலன் என்பவரின் மகளான இவர், அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட முதல் கறுப்பினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மனித உரிமை ஆர்வளர்களான இவரது பெற்றோருக்கு, கல்லூரி காலத்தின்போது காதல் மலர்ந்துள்ளது.
ஷியமளாவின் தந்தையான பி.வி கோபாலன் அரசு ஊழியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சென்னை பெசன்ட் நகரில் வசித்த இவர், ஓய்வுக்குப்பின் தனக்குக் கிடைத்த பணத்தை மகளின் விருப்பத்திற்கு இணங்க வெளிநாட்டில் உயர்கல்வி மேற்கொள்ள அளித்தார்.
தனது தாத்தாவின் நேர்மையான குணம் குறித்தும், அவரது செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு பேட்டிகளில் கமலா ஹாரிஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதைவிட தனது தாயான ஷியாமளாவை அவர் தனது முக்கிய ஆதர்ஷமாகக் கருதுகிறார் கமலா. எனது தாயார் பல்வேறு சவாலான சூழலை எதிர்கொண்டு வாழ்கையில் வெற்றிக் கொண்டவர். அவரது நிறம், மொழி ஆகியவற்றைக் கொண்டு அவரது அறிவை கீழானதாக எடைபோட்டனர். ஆனால், அவர்களின் எண்ணத்தை எப்போதும் பொய்யாக்கியுள்ளார் எனது தாய் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் கமலா.
இத்தகைய முற்போக்கு எண்ணங்கள் கொண்ட கமலா ஹாரிஸ், துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், 2024ஆம் ஆண்டு அதிபராகப் போட்டியிடும் வாய்ப்பும் கமலாவுக்கு கிடைக்கும். மேலும், இவர் வெற்றி பெறும் பட்சத்தில் ஜம்மு-காஷ்மீர் விவகாரம், குடியுரிமை சட்டத்திருத்த விவகாரம் ஆகியவை குறித்து இந்தியாவுடன் அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்க மேலவை உறுப்பினராக பதவிவகிக்கும் ஒரே பெண்ணான கமலா, கறுப்பினத்தவர்கள் மீதான காவல் துறையினரின் தாக்குதலை தடுக்கும் நோக்கில் சீர்திருத்தங்களை மேற்கொள்வேன் என உறுதியளித்துள்ளார். இந்தக் கருத்தில் தற்போதைய அதிபர் ட்ரம்பின் எதிர்நிலையில் நிற்கிறார், கமலா ஹாரிஸ்.
பாலின சிக்கல், நிறவெறி, சட்டம் ஒழுங்கு விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களில் அதிபர் வேட்பாளரான ஜோ பிடனுடன் இணைந்து கமலா ஹாரிஸ் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முதல் கறுப்பின பெண் வேட்பாளர் ஷிர்லே சிஸ்லோம், 'நான் அமெரிக்காவின் முதல் கறுப்பின பெண் வேட்பாளர் என நினைவு கொள்வதைவிட, 20ஆம் நூற்றாண்டில் தனது விருப்பம் போல் வாழத்துணிந்த பெண் எனவே நினைவு கூற விரும்புகிறேன்' என்றார். அவரது இந்த வரிகளே வரலாறாக மாறி நிற்கிறது.