அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடக்கயிருக்கும் அதிபர் தேர்தலுக்கான அரசியல் பரபரப்புகள் தொடங்கி விட்டன. பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பைடன், துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். அந்நாட்டு அரசியல் வரலாற்றில் முதல்முறையாக காணொலி காட்சி மூலம் நடந்த ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியானது முதல், பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் அங்கு தேர்தல் களம் சூடு பிடுத்துள்ளது. இந்த முறை அதிபர் வேட்பாளரை விட, துணை அதிபர் வேட்பாளர் தான் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார்.
காரணம், தேர்தல் களம் காணும் முதல் இந்திய-அமெரிக்க பெண், முதல் ஆசிய-அமெரிக்கப் பெண், ஆசிய-அமெரிக்க குடிபெயர்ந்த பெண் என்ற பெருமைகளை கமலா ஹாரிஸ் பெற்றிருப்பது தான். அதிபருக்கு அடுத்தப்படியாக மிகப் பெரிய பதவியான துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி பெண்ணை எதிர்க்கட்சி நிறுத்துவதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மா, ’அமெரிக்காவின் போர்க்களம் 2020’ என்ற பெயரில் தொடர் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதர் மீரா சங்கர் மற்றும் வாஷிங்டனில் செயல்படும் தி ஹிந்து பத்திரிகையின் அமெரிக்க செய்தியாளர் ஸ்ரீராம் லக்ஷ்மண் ஆகியோரிடம் கலந்துரையாடியுள்ளார்.
ஒபாமா அமைச்சரவையில் துணை அதிபராக பதவி வகித்த ஜோ பைடன் முன்மொழியும் அளவுக்கு, கமலா ஹாரிஸ் பெற்றுள்ள முக்கியத்துவம் குறித்து ஸ்ரீராம் லஷ்மண் கூறும் போது, “கமலா ஹாரிஸுக்கு மிகச் சிறந்த பொதுச் சேவை பின்னணி உள்ளது. கலிஃபோர்னியாவில் பல ஆண்டுகளாக சிறந்த வழக்கறிஞராக செயல்பட்டு வந்துள்ளார். அவருக்கு பல்வேறு தகுதிகள் உள்ளன. இதன் மூலம் கறுப்பினத்தவர்களின் ஓட்டுக்களை கவர முடியும், தெற்காசியாவினரின் ஓட்டுக்களை கவர முடியும், பெண் என்பதால் பெண்கள் உள்பட பல தரப்பு ஓட்டுக்களைப் பெற முடியும். இது மட்டுமின்றி, கமலாவை பைடன் தேர்வு செய்ததற்கு மேலும் சிறப்பான காரணங்களும் உள்ளன. அவர் பைடனை விட பல ஆண்டுகள் இளையவர். அடுத்த நான்கு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு துடிப்புடன் செயல்பட முடியும்” என்றார்.
“பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இனம் என்பது முக்கிய அங்கம் வகிக்கிறது. தற்போது அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் எதிர்ப்பு அலை இருப்பதால், கறுப்பினத்தவர்களின் ஆதரவு கமலாவுக்கு நிச்சயம் இருக்கும்,” என்று மீரா சங்கர் கூறுகிறார். இந்திய வம்சாவளியினர் அதிகளவில் அமெரிக்காவில் இல்லை. ஆனாலும் அங்குள்ள மிகப் பெரிய கட்சிகளான குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் ஏன் இந்திய வம்சாவளியினருக்கு அதிக முக்கியத்தும் அளிக்கின்றன என்பதற்கு, சுலபமாக விடை கண்டுபிடித்து விடலாம். மிகப் பெரிய அளவு மக்கள் தொகை இல்லையென்றாலும், அரசியல் ரீதியாக அதிகளவு ஈடுபாடு மற்றும் பொருளாதார பங்களிப்பில் முக்கியத்தும் பெற்றிருப்பதால் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று ஓய்வு பெற்ற அரசு உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
“மிகப் பெரிய வாக்கு வங்கியில்லை. இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் மொத்தமுள்ள வாக்காளர் எண்ணிக்கையில் 4.7 விழுக்காடு தான் ஆசிய மக்கள் இருப்பார்கள். அமெரிக்க சிறுபான்மையினரில் ஹிஸ்பானி இனத்தவர்கள் அதிகளவாக 13 விழுக்காடும், கறுப்பினத்தவர்கள் அதிகளவாக 12 விழுக்காடும் உள்ளனர். ஆனால் வாக்குகளை மாற்றிப் போடக்கூடிய சூழலில் உள்ள பகுதிகளில் அதிகளவில் இந்திய வம்சாவளியினர் இருப்பதால், அதிகளவு எதிர்ப்பு ஓட்டுக்கள் விழலாம். அதனால் இந்திய வம்சாவளியினரின் ஒவ்வொரு ஓட்டும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது” என்று மீரா சங்கர் கூறுகிறார்.
“இந்திய வம்சாவளியினர் வளமான சமூகத்தினராக உள்ளனர். அத்துடன் அரசியலில் அதிக ஈடுபாட்டுடன் உள்ளனர். அதனால் சமீபகாலங்களில் அரசியல் நன்கொடையாளர்களில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அமெரிக்காவில் தேர்தல் களத்தில் உள்ள ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒவ்வொரு வேட்பாளருக்கும் தேர்தல் நிதி மிக அவசியமானதாக இருப்பதால், அனைத்து பக்கங்களிலும் இந்திய வம்சாவளியினருக்கு சாதகமான சூழல் அதிகளவில் உருவாகியுள்ளது. இது மட்டுமின்றி தற்போது அமெரிக்காவின் அடையாளங்களாக விளங்கும் கூகுள், மைக்ரோசாஃப்ட், ஐபிஎம், மாஸ்டர்கார்டு உள்பட பல்வேறு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் இந்திய வம்சாவளியினர் அமர்ந்துள்ளனர். பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவராக இந்தியர் பொறுப்பு வகித்தார். இவை அனைத்தும் அமெரிக்க பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் நிறுவனங்கள் என்பதால், இந்திய வம்சாவளியினரின் கை இந்த தேர்தலில் ஓங்கியிருக்கும்,” என்று முன்னாள் அலுவலர் தெரிவித்துள்ளார்.
வாக்குகள் மாறக்கூடிய சூழல் கொண்ட ஏழு மாகாணங்களில் உள்ள 1.3 மில்லியன் வாக்குகளில், குறைந்தபட்சம் ஒரு மில்லியன் வாக்குகளையாவது வாங்கி விட வேண்டும் என்ற முனைப்பில் இரு கட்சிகளும் இருப்பதாக தெரிவிக்கும் ஸ்ரீராம் லஷ்மண், “இந்திய வம்சாவளியினரின் பெருவாரியான வாக்குகள் ஜனநாயகக் கட்சிக்கு தான் சென்றுள்ளன. கடந்த தேர்தலில் 77 விழுக்காட்டினர் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களித்தனர். இந்திய வம்சாவளியினர் அதிகளவில் உள்ள இந்த மாநிலங்களில் கடந்த தேர்தலில் ஹிலாரி – ட்ரம்ப் இடையிலான வாக்கு வித்தியாசம் மிகக் குறைந்த அளவு தான். அதனால், இரண்டு கட்சிகளும் இந்த முறை காய் நகர்த்துகின்றன” என்றார்.
சூழல் இப்படியிருக்க, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வயதானவர்கள், கமலா ஹாரிஸை காட்டிலும் ட்ரம்ப்புக்கு தான் அதரவளிக்கின்றனர். “இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் மற்றும் 45 வயதினரின் முடிவுகளுக்கு எதிராக, இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் வயதானவர்களின் மனநிலை வேறுமாதிரியாக உள்ளது. அவர்கள் அமெரிக்கர்களைப் போலவே ட்ரம்ப்புக்கு ஆதரவளிக்கின்றனர்” என்று ஸ்ரீராம் கூறுகிறார். “மோடி-ட்ரம்ப் இணக்கம் காரணமாக, ட்ரம்ப்புக்கு சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் நன்றாக சிந்திக்கும் இளைய தலைமுறையினர், வேலைவாய்ப்புகளை முன்னிறுத்துகின்றனர். பேரிடர் சூழல், இன பாகுபாடு ஆகியவையும் ட்ரம்ப்புக்கு எதிரான அலையை ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில், கமலா ஹாரிஸின் இந்திய நிலைப்பாடும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவில் மிக முக்கிய பிரச்னைகளாக வெடித்துள்ள காஷ்மீர், சிஏஏ, மற்றும் என்ஆர்சி விவகாரங்களில் இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்களை கமலா கொண்டுள்ளார். இதுமட்டுமின்றி இந்தியாவின் மனித உரிமைகள், சுதந்திர தன்மை ஆகியவற்றிலும் ஜனநாயகக் கட்சி அதிருப்தியில் இருப்பதால், இந்திய பிரதமர் மோடி ஆதரவாளர்களின் எதிர்ப்பை கமலா சம்பாதிக்கக் கூடும்.
“தெளிவாகக் கூற வேண்டுமானால், ஆதரவும், எதிர்ப்புகளும் கலந்திருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனாலும் இந்தியாவுடன் ஒருமித்த கருத்தை உருவாக்கி உறவை பலப்படுத்துவதில் இரண்டு கட்சிகளும் உறுதியாக உள்ளன. சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு தான் இதற்கு முக்கிய காரணம். சீனாவின் சமீபத்திய எல்லை தாண்டு விவகாரங்களை முன் வைத்து இந்திய -அமெரிக்க உறவுகளை பலப்படுத்துவதற்கு ஜனநாயகக் கட்சியும், குடியரசுக் கட்சியும் முனைப்பு கொண்டுள்ளன” என்று மீரா சங்கர் தெரிவிக்கிறார். ஜனநாயகக் கட்சி எப்போதும் மன உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும், இந்தியாவில் இந்த சிக்கல் இருந்தாலும், உறவுகளை பலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வார்கள் என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.
எனினும் இந்த சூழலில் இந்தியா தனது பொருளாதார சிக்கல்கள், ட்ரம்ப்பின் ஜிஎஸ்பி பின்வாங்கல் முடிவு, மிக மெதுவாக வளரும் நாடு என்ற அந்தஸ்திலிருந்து இந்தியாவை நீக்கும் விவகாரம், இரும்பு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கான விலைப்பட்டியலை அதிகரிக்கும் விவகாரம் மற்றும் ட்ரம்ப்பின் ஹெச்1பி விசா நிறுத்தம் ஆகியவற்றின் மீது அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கலாம். ஏற்கனவே இந்தியாவுக்கு சாதகமாக ட்ரம்ப் அறிக்கைகள் வெளியிட்டுள்ள நிலையில், மேற்கண்ட சிக்கல்களை இந்தியா முன்வைக்க இது சரியான நேரம் என்று, மீரா சங்கர் தெரிவித்துள்ளார்.