வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவரான ஜுவான் குவாய்டோ, இந்த ஆண்டு ஜனவரியில் தன்னை அதிபராக அறிவித்துக்கொண்டார்.
இதனை ஆதரித்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தற்போது அதிபராக இருக்கும் நிக்கோலஸ் மடூரோவை பதவி விலகும்படி வலியுறுத்தி வருகின்றன. இதனை மடூரோ மறுத்துவருகிறார். இவருக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் களமிறங்கியுள்ளன.
வெனிசுவேலா மக்களிடம் பேசும் ஜுவான் குவாய்டோ! இதனிடையே, நாட்டை மடூரோவிடமிருந்து மீட்டெடுக்கும் நோக்கில் முழுவீச்சில் இறங்கியுள்ள தனது ஆதரவாளர்களுடன் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார் ஜுவான் குவாய்டோ.
இந்நிலையில், இன்று தலைநகர் கராகஸில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களிடம் உரையாற்றிய ஜுவான் குவாய்டோ, பல்வேறு ஆண்டுகளாக ராணுவத்தினரோடு பேச்சுவார்த்தை நடத்திவந்ததன் விளைவாக, தற்போது வெனிசுவேலா மக்களுடன் ராணுவம் துணை நிற்கிறது என்று தெரிவித்தார்.
ராணுவப் படை சூழ தொடர்ந்து உணர்ச்சி பொங்க பேசிய குவாய்டோ, ஆப்ரேஷன் விடுதலையின் இறுதிக்கட்டத்தை அதிரடியாக அறிவித்தார். இதனை ஆட்சி கவிழ்ப்பு செயல் என்று குற்றம்சாட்டியுள்ள அதிபர் நிக்கோலஸ் மடூரோ, இதற்கெல்லாம் தான் தலை குனியப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அதிபர் மடூரோவுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது ராணுவம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.