அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவர், காவலரின் பிடியில் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டையே உலுக்கி வருகிறது. இதன் எதிரொலியாக அந்நாடு முழுவதும் இனவெறிக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்கள் பிரேசில், கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது.
கடந்த காலத்தில் கறுப்பின மக்களை அடிமைப்படுத்தியோர், ஏகாதிபத்தியத்தில் ஈடுபட்டோரின் சிலைகளுக்கு கருப்பு சாயம் அடிப்பது, அடித்து உதைப்பது போன்ற செயல்களிலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணம் ரிச்மவுண்டில் நேற்று இரவு நடந்த போராட்டத்தின்போது, ஜெஃபர்சன் டேவிஸின் சிலையை போராட்டக்காரர்கள் அடித்து உடைத்தனர்.
1861ஆம் ஆண்டு முதல் 1865ஆம் ஆண்டு வரை நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, அமெரிக்க அரசை எதிர்த்து போரிட்ட கான்ஃபெடரேட் ஸ்டேட் ஆஃப் அமெரிக்கா என்ற அங்கீகரிக்கப்படாத நாட்டின் அதிபராக பதவி வகித்த ஜெஃபர்சன் டேவிஸ், அடிமைத்தனத்துக்கு சாதகமா இருந்தவர் ஆவார்.
இதனிடையே, ரிச்மவுண்டில் இருந்து சுமார் 130 கி.மீ. தொலைவில் உள்ள போர்ஸ்மவுத் என்ற பகுதியில் நடந்த போராட்டத்தின்போது, கான்ஃபெடரேட் ஸ்டேட் ஆஃப் அமெரிக்காவைச் சேர்ந்த வேறு சில தலைவர்களின் சிலைகளும் சேதப்படுத்தப்பட்டன.
கடந்த வாரம் ஜெஃபர்சன் டேவிஸுக்கு தளபதியாக இருந்த ராபர்ட் இ லீயின் சிலையை நீக்குமாறு வெர்ஜினியா ஆளுநர் ரல்ஃப் நார்தாம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளைப் பார்க்க உக்ரைன் வந்த தம்பதிகள்!