தமிழ்நாடு

tamil nadu

"ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் இது" - ஒபாமா

By

Published : Nov 16, 2020, 3:47 PM IST

Updated : Nov 16, 2020, 3:52 PM IST

வாஷிங்டன்: அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைந்ததை ட்ரம்ப் ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் இது என்று முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

Obama
Obama

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் 306 எலக்டோரல் காலேஜ் வாக்குகளை பெற்று அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தேர்ந்தெடுப்பட்டுள்ளார்.

இருப்பினும், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிபர் ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புகொள்ள மறுத்துவருகிறார். தேர்தலில் மாபெரும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், பென்சில்வேனியா, நெவாடா, மிச்சிகன், ஜார்ஜியா, அரிசோனா ஆகிய மாகாணங்களின் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், சிபிஎன்சி செய்தி நிறுவனத்திற்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அளித்த பேட்டியில் ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே நான் நினைக்கிறேன். தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, ஜோ பைடன் வென்றுள்ளது நமக்கு தெளிவாகத் தெரியும்.

எந்தவொரு மாகாணமும் இதன் பின் தேர்தல் முடிவுகளை மாற்றாது. அதற்கான எந்தவொரு முகாந்திரமும் தெரியவில்லை.

வெள்ளை மாளிகையில் இருப்பவர் (அமெரிக்க அதிபர்) என்றும் மக்கள் பிரதிநிதிதான். உங்கள் நேரம் முடிந்துவிட்டது என்றால் உங்கள் ஈகோவையும், சொந்த நலன்களையும் தாண்டி சிந்திக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து அதிகார மாற்றம் குறித்து பேசிய அவர், "அமெரிக்காவில் இதுவரை அதிகார மாற்றங்கள் அனைத்தும் சுமுகமாகவே நடைபெற்றுள்ளது. வெள்ளை மாளிகைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நபரை அதிபர் அழைக்க வேண்டும்.

மேலும், பதவியேற்பு விழாவில் பங்கேற்று நாட்டை சிறப்பாக வழிநடத்த புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவிப்பதுதான் அமெரிக்காவின் வழக்கம். இதையெல்லாம் ட்ரம்ப் செய்கிறாரா இல்லையா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் அடுத்தாண்டு ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.

இதையும் படிங்க: அமெரிக்க வரலாற்றில் இதுதான் பாதுகாப்பான தேர்தல்!

Last Updated : Nov 16, 2020, 3:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details