சீனாவின் தென் கிழக்கு பகுதியிலுள்ள தைவானில் சுயாட்சி இருக்கும்போதும், அது தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்றே சீனா தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. இந்நிலையில், சில நாள்களுக்கு முன் அமெரிக்காவின் போயிங் 737 ராணுவ விமானம் தைவானின் வான்வெளியில் சென்றது.
இது குறித்து தைவான் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க ராணுவ விமானம் உரிய அனுமதியுடன்தான் தைவான் நாட்டின் வான்வெளியில் நுழைந்தது. அமெரிக்க ராணுவ விமானம் எந்தவொரு தைவான் விமான நிலையத்திலும் தரையிறங்கவில்லை. அதற்கான அனுமதியையும் நாங்கள் அளிக்கவில்லை" என்று தெரிவித்திருந்தது.
அமெரிக்காவின் கடற்படைக்குச் சொந்தமான அந்த விமானம் ஜப்பானிலுள்ள கடேனா என்ற விமான தளத்திலிருந்து, தாய்லாந்து நாட்டிற்கு சரக்குப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வழக்கமான விமானம். சில காரணங்களால் அந்த விமானம் தைவான் நாட்டின் வான்வெளியை பயன்படுத்திச் செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்று சீனா கூறிவந்தாலும், அரசியல் ரீதியாக சீனாவிலிருந்து தைவான் விலகியே உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களே தைவானில் ஆட்சி செய்கின்றனர். தனது வான்வெளியை முற்றிலும் தைவான் நாடே நிர்வகிக்கிறது.
இருப்பினும், அமெரிக்காவின் இச்செயலுக்கு சீனா கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது குறித்து சீனாவின் தைவான் விவகாரத் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க ராணுவ விமானத்தின் செயல் எங்கள் இறையாண்மை, பாதுகாப்பு, உரிமை ஆகியவற்றுக்கு களங்கம் விளைவித்துள்ளது. மேலும் சர்வதேச சட்டத்தையும், விதிமுறைகளையும் அமெரிக்கா மீறியுள்ளது.