குவாம்:இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் 'குவாட் நாடுகள்' என்று அழைக்கப்படுகின்றன. இந்த நாடுகளின் கடற்படைகள் ஆண்டுதோறும் மலபார் கூட்டு பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல, இந்தாண்டு அமெரிக்காவின் மேற்கு பசிபிக் பெருங்கடல் அமைந்துள்ள குவாம் தீவில் இந்த பயிற்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இது மலபார் கூட்டப்பயிற்சியின் 25ஆவது பயிற்சியாகும். இந்தப் பயிற்சியில் பங்கேற்க இந்திய கடற்படையின்ஐஎன்எஸ் சிவாலிக், ஐஎன்எஸ் காத்மாட் போர்க்கப்பல்கள் பங்கேற்கின்றன. இந்தப் பயிற்சி, இன்று தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பயிற்சிக்கு அமெரிக்க கடற்படை தலைமை தாங்குகிறது.
இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், “இந்த கூட்டு போர்ப் பயிற்சி 4 நாடுகளின் கடற்படையைச் சேர்ந்த விமானம் தாங்கி கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கடற்படை விமானங்களும் பங்கேற்கின்றன. போர்ப்யிற்சியின் போது ஆயுத பயன்பாடு, துல்லிய தாக்குதல், வான் எதிர்ப்பு, நீர்மூழ்கிகப்பல் பயிற்சி, சூழ்ச்சிகள், தந்திரோபாய பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.