ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த மாதம் 5ஆம் தேதி மத்திய ரத்து செய்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான தூதரக, வணிக உறவுகளைத் துண்டித்துக் கொண்டது. காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்கும் முயற்சியில் தொர்ந்து தீவிரமாக அந்நாடு ஈடுபட்டு வருகிறது.
இதனால் இது நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில், காஷ்மீர் பிரச்னை குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "காஷ்மீர் பிரச்னையில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான மோதல் இரண்டு வாரங்களுக்கு முன்னிருந்ததை விடச் சற்று தணிந்துள்ளது.
இருநாடுகளும் ஒப்புக்கொண்டால் காஷ்மீர் பிரச்சனையில் அவர்களுக்கு உதவத் தயார்" என்றார்.
முன்னதாக, ஆகஸ்ட்டில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் சந்தித்துப் பேசினர்.
அப்போது, காஷ்மீர் பிரச்னையில் முன்றாம் தரப்பினருக்கு இடமில்லை என மோடி தெரிவித்திருந்தார். அதனை ட்ரம்ப்பும் ஏற்றுக்கொண்டார். இந்த சந்திப்பை தொடர்ந்து காஷ்மீர் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசுவது இதுவே முதன் முறையாகும்.