அமெரிக்க நிறுவனங்களில் பணி நிமித்தம் காரணமாக குடியேறும் வெளிநாட்டவர்களுக்கு ஹெச்-1பி (working visa) விசா வழங்கப்படுகிறது. மென்பொருள் நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஹெச்-1பி விசா அடிப்படையில் ஆயிரக்கணக்கில் பணியாளர்களை பணி நியமனம் செய்கின்றன. இந்நிலையில் ஹெச்- 1பி விசாவிற்கு தடை விதிக்கப்பட்டது.
கரோனா ஏற்படுத்திய பொருளாதார சுணக்கத்தைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஹெச்-1பி விசாவிற்கு தடை நீட்டிப்பு செய்தார். பிறநாட்டில் இருந்து வரும் தொழிலாளர்களால் உள்நாட்டவர்களின் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்பதால் தேச நலனையும், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு ஹெச்-1 பி விசா தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.
இந்தத் தடை இந்தாண்டு வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையினால் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு கடும் சிரமம் ஏற்படும்.
ஏனெனில் இந்த விசாவை மார்ச் 31ஆம் தேதிக்கு பின்னர் தான் கால நீட்டிப்பு குறித்து விண்ணப்பிக்க முடியும். ஆனால் அதற்கு இடைப்பட்ட காலத்தில் பெரும்பாலான இந்திய தகவல்தொழில்நுட்பப் பணியாளர்களின் விசா புதுப்பிக்கப்பட வேண்டியிருக்கும். அப்படியிருக்கும் பட்சத்தில் அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படும். இதனால் அந்நாட்டு மக்களின் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.