வாஷிங்டன்: கரோனா சூழல், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை நடுவே நடைபெறவுள்ள பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழா அமெரிக்க வரலாற்றில் வழக்கத்துக்கு மாறானதாக இருக்கப் போகிறது.
‘ஒன்றிணைந்த அமெரிக்கா’ என்பதே இந்த ஆண்டின் மையக்கரு என அதிபர் பதவியேற்பு குழு தெரிவித்துள்ளது. ஜனவரி 19ஆம் தேதி கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 'ஒற்றுமை மற்றும் நினைவூட்டலின் தேசிய தருணம்’ என்ற பெயரில் அனைவரையும் தீபமேற்ற அதிபர் பதவியேற்பு குழு வலியுறுத்தியது.
பதவியேற்பு விழா தெரிவிப்பது என்ன?
நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பைடன் வெற்றி பெற்றிருந்தாலும், அவர் அந்த நாளே அதிபராக பதவியேற்கவில்லை. அமெரிக்க சட்டத் திருத்தம் 20-இன் படி ஜனவரி 20ஆம் தேதி மதியம்தான் அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸின் பதவிக்காலம் முடியும்.
முன்னதாக மார்ச் 4ஆம் தேதி பதவியேற்பு விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 1933ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தம், தேர்தலுக்கும் பதவியேற்புக்குமான காலம் 2 மாதங்கள் என தெரிவிக்கிறது. இந்த காலகட்டத்தில் முன்னாள் அதிபர் தனது மிச்சமுள்ள பணிகளை நிறைவு செய்ய வேண்டும்.
பதியேற்புக்கான வழிமுறைகள்:
அதிபராக பொறுப்பேற்கும் முன்பு பதவிப் பிரமாணம் எடுக்க வேண்டும். அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ஜி ராபர்ட்ஸ் இந்த பதவியேற்பு விழாவை நிர்வகிப்பார். துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கான பதவியேற்பு நிகழ்வை உச்ச நீதிமன்ற நீதிபதி சோனியா சோடோமேயர் நிர்வகிப்பார்.