அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பொதுவாகவே நிறைய தவறான தகவல்களைத் தனது மேடைப் பேச்சுகளிலும் செய்தியாளர் சந்திப்புகளிலும் கூறுவது வழக்கம். அவரது பேச்சுகளில் எவை போலியானவை எவை உண்மையானவை என்பதைக் கண்டறியவே அமெரிக்க தொலைக்காட்சிகள் தினசரி ஒரு நிகழ்ச்சியை நடத்துமளவு அவரது பேச்சுகள் இருக்கும்.
அதேபோல் தனது ட்விட்டர் பக்கத்திலும் அவ்வப்போது போலி தகவல்களைக் கொண்ட ட்வீட்களை பதிவிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்துவார் ட்ரம்ப். இருப்பினும் இதுவரை அவரது ட்வீட்களுக்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததில்லை.
இந்நிலையில், இந்தாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் கோவிட்-19 தொற்று காரணமாக முற்றிலும் தபால் மூலம் நடக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தபால் மூலம் நடைபெற்றால் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு அது பாதகமாக முடியும் என்பதால் அவர் தொடர்ந்து தபால் மூலம் வாக்களிக்கும் முறைக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்திவருகிறார்.
அதன்படி பரப்புரைகளில் பிஸியாகவுள்ள ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "தாபல் மூலம் வாக்களிக்கும் முறையில் பல்வேறு மோசடிகள் நடக்கும். தபால் வாக்குகள் திருடப்படலாம். ஏன் போலியான தபால் வாக்குகள் அச்சடிக்கப்படலாம்.
கலிபோர்னியா மாகாணத்தில் பல லட்சம் பேர் எவ்வாறு குடியேறினார்கள் என்பது கூட விசாரிக்கப்படாமல் அவர்களுக்குத் தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இது ஒரு மோசடியான தேர்தல்!" என்று பதிவிட்டுள்ளார்.