தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

என் மீதான பதவி நீக்க தீர்மானம் அரசியல் தற்கொலைக்குச் சமம் - அதிபர் ட்ரம்ப்

வாஷிங்டன்: எதிர்க்கட்சியினர் கொண்டுவந்துள்ள பதவி நீக்க தீர்மானம் அரசியல் தற்கொலைக்குச் சமம் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Trump
Trump

By

Published : Dec 19, 2019, 3:32 PM IST

Updated : Dec 19, 2019, 4:06 PM IST

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், ஜோ பிடன், அவரது மகன் ஹண்டர் பிடன் ஆகியோர் உக்ரைன் நாட்டில் செய்துவரும் தொழில் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஸெலென்ஸ்கியை வற்புறுத்தி, நெருக்கடி கொடுத்ததாக டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ட்ரம்ப் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதோடு, அந்நிய நாட்டிடம் ரகசியமாக உதவி கேட்டதன் மூலம் தேசியப் பாதுகாப்புக்கு பங்கம் விளைவித்ததாக ஜனநாயகக் கட்சியினர் (எதிர்க்கட்சியினர்) குற்றஞ்சாட்டினர்.

இதையடுத்து, ட்ரம்ப் மீதான புகாரை விசாரித்து அவரை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் தலைமையில் நாடாளுமன்ற விசாரணைக் குழு செப்டம்பர் மாதம் விசாரணையைத் தொடங்கியது.

இந்த விசாரணையில் ஆஜரான உக்ரைன், அமெரிக்க தூதர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் ட்ரம்ப்புக்கு எதிராக வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து இம்மாத தொடக்கத்தில் வெளியான விசாரணை அறிக்கையில், அதிபர் ட்ரம்ப் தன் அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்தி உக்ரைன் நாட்டுக்கு அழுத்தம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளதென தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு ட்ரம்ப்புக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானத்தை விசாரணைக் குழு கொண்டுவந்தது. இந்தத் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கு (கீழ்சபை) அனுப்பலாம் என வாக்கெடுப்பு மூலம் விசாரணைக் குழுவில் முடிவெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ட்ரம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மானம், பிரதிநிதிகள் சபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பிரதிநிதிகள் சபையில் பெரும்பாலான எம்.பி.க்கள் ஜனநாயகக் கட்சியினர் என்பதால் இந்தத் தீர்மானம் எந்த ஒரு தடையுமின்றி நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "அதிபரை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு இல்லை என்பதில் ஜனநாயகக் கட்சியினர் (Democratic Party) நம்பிக்கை வைத்துள்ளனர். அமெரிக்க மக்கள் மீதான வெறுப்பையும் நம்பிக்கையின்மையையும் ஜனநாயகக் கட்சியினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒரு சார்புள்ள பதவி நீக்க தீர்மானம் ஜனநாயகக் கட்சியின் அரசியல் தற்கொலைக்குச் சமம். பதவி நீக்க தீர்மானத்திற்கு எதிராக ஒன்றாக வாக்களித்த குடியரசுக் கட்சியினரைப் பாராட்டுகிறேன். இதேபோல், செனட் சபையிலும் குடியரசுக் கட்சியினர் செயல்படுவார்கள் என நம்புகிறேன்" என்றார்.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

இதையும் படிங்க: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த உமர் காலித் கைது

Last Updated : Dec 19, 2019, 4:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details