அமெரிக்காவின் 42ஆவது அதிபராக பதவி வகித்தவர் பில் கிளிண்டன். இவர், 1993ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தார். இவர் ஆட்சியாளராக இருந்த போது, வெள்ளை மாளிகையில் பணிபுரிந்தவர் மோனிகா லெவின்ஸ்கி.
இவர் 1995ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். அப்போது மோனிகாவுக்கு வயது 20. கிளிண்டனுக்கு வயது 50. அப்போது இருவருக்கும் இடையே காதல் தீ பற்றியதாக பரபரப்பான செய்திகள் வெளியாகின. அலுவலக ஊழியர், அந்தரங்கப் பணியாளர் ஆனக் கதை” என்ற தலைப்பில் விவாதங்கள் கூட நடந்தன.
இந்தப் புயல் அமெரிக்காவை மட்டுமின்றி கிளிண்டன் வீட்டையும் பதம் பார்த்தது. எனினும் கிளிண்டனின் மனைவி ஹிலாரி, தனது கணவரை முழுமையாக நம்பினார். அதன் பின்னர் ஹிலாரிக்கு உண்மை புரியவந்தது.
இதனால் மனம் வெதும்பினார். ஹிலாரியை கிளிண்டன் தேற்றினார். எனினும், இவ்விவகாரம் தொடர்பாக கிளிண்டன் பொதுவெளியில் பெரிதளவில் விளக்கம் கொடுத்தது கிடையாது. ஆகவே இந்த காதல் கதை 'நீறு பூத்த நெருப்பாக' அவ்வப்போது தேர்தல் நேரத்தில் வந்து மறையும்.
இந்த நிலையில் திருமணத்தைத் தாண்டிய உறவு தொடர்பான ஆவணத் தொடர் ஒன்றுக்கு பில் கிளிண்டன் அளித்துள்ள பேட்டியில், தனது முன்னாள் காதலி குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “15 சுற்றில் (ரவுண்ட்) முடிய வேண்டிய குத்துச் சண்டை போட்டி, 30 சுற்று தொடர்ந்தால் ஒரு வீரனின் மனநிலை எவ்வாறு இருக்கும்? அப்போதுள்ள களைப்பான சூழலில் மனம் அமைதியைத் தேடும் அல்லவா? அதுபோல்தான் அது நடந்தது.
எனது பிரச்னைகளுக்கு மத்தியில் மன ஆறுதல் கொடுத்தது. ஆனால், அது மோசமான தவறென்பதை உணர்ந்தேன். அவளுடன் படுக்கையில் உட்கார்ந்து பேசினேன். அதன் தாக்கம் என்னை வெகுவாக பாதித்தது. நான் பாதுகாப்பற்றவனாக உணர்ந்தேன். அச்சூழல் எனக்குப் பயத்தை கொடுத்தது. இது பற்றி ஹிலாரியிடம் கூறினேன். அவள் அதிர்ந்தாள். நான் செய்த தவறை என்னால் மன்னிக்க முடியாது என்றார்.
இது பற்றி ஹிலாரி கூறுகையில், “அவர் (பில் கிளிண்டன்) பல நேரங்களில் உணர்ச்சி மிகுந்து காணப்பட்டார். நான் தனிப்பட்ட முறையில் காயப்பட்டேன். என்னால் அதனை நம்ப முடியவில்லை. பேரழிவுக்கு உள்ளானேன்” என்றார்.