அமெரிக்காவில் மினியாபோலிஸ் நகரில் 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர், கடந்த மாதம் 25ஆம் தேதி காவல் துறையினரின் கோரப் பிடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி உலகளவில் பெரும் எதிர்ப்பலைகளைக் கிளப்பியுள்ளது. ஜார்ஜ் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், நிறவெறியை எதிர்த்தும் அந்நாட்டில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதன் எதிரொலியாக, பிரேசில், கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் நிறவெறிக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ளன.
கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் எழுந்துள்ள இந்த மக்கள் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனிடையே, ஹூஸ்டன் நகரில் நேற்று ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில், 500க்கும் மேற்பட்டோர் முகக்கவசம் அணிந்தவாறு கலந்துகொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.