தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கமலா ஹாரிஸ் உச்சரித்த 'சித்தி' - அர்த்தம் புரியாமல் கூகுளிடம் கேட்ட அமெரிக்கர்கள்

வாஷிங்டன்: ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் உச்சரித்த 'சித்தி' எனும் வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல், அமெரிக்கர்கள் கூகுளில் தேடத் தொடங்கியதால் அந்த வார்த்தை இணையத்தில் நேற்று வைரலானது.

Harris creates buzz
Harris creates buzz

By

Published : Aug 21, 2020, 2:25 PM IST

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்தத் தேர்தலில் ட்ரம்பின் குடியரசுக் கட்சியை எதிர்த்துப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் அதிபர், துணை அதிபர் வேட்பாளர்கள் ஏறக்குறைய உறுதியாகிவிட்டபோதும், அவர்களை முறைப்படி அறிவிக்கும், அக்கட்சியின் நான்கு நாள் மாநாடு திங்கள்கிழமை (ஆக. 17) தொடங்கியது.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த மாநாட்டின் மூன்றாவது நாளில், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவரும், ஆப்பிரிக்க அமெரிக்கருமான கமலா ஹாரிஸ் முறைப்படி புதன்கிழமை (ஆக. 19) அறிவிக்கப்பட்டார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் தான் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை கமலா ஹாரிஸ் முறைப்படி ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட முதல் ஆப்பிரிக்க - அமெரிக்கப் பெண் எனும் புதிய வரலாற்றை கமலா ஹாரிஸ் படைத்துள்ளார்.

அந்நிகழ்வைத் தொடர்ந்து உரையாற்றிய, கலிபோர்னியா நாடாளுமன்ற உறுப்பினர் கமலா ஹாரிஸ், "எனது தாயார் என்னையும் எனது சகோதரியையும் கஷ்டப்பட்டு வளர்த்தார். அவர் எங்களை பெருமை பொங்கும் வலிமையான ஆப்பிரிக்க - அமெரிக்க பெண்களாகவே வளர்த்தார். எங்கள் இந்தியப் பாரம்பரியம் குறித்த பெருமைகளை எடுத்துக்கூறியே வந்துள்ளார்.

குடும்பத்திற்கு முதலிடம் அளிக்க அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். பிறந்த குடும்பம், தேர்ந்தெடுக்கும் குடும்பம் என இரண்டுமே இதில் அடங்கும். குடும்பம் என்றால் என் நண்பர்கள், மாமாக்கள், அத்தைகள், சித்திகள் என்று அனைவரும் அதில் அடக்கம்" என்றார்.

இந்நிலையில், கமலா ஹாரிஸ் தனது உரையில் பேசிய 'சித்தி' எனும் வார்த்தை ஒட்டுமொத்த அமெரிக்கர்களும் அறியாத வார்த்தையாக இருந்தது. இதன் காரணமாக நெட்டிசன்கள் பலரும் ”சித்தி என்ற வார்த்தையின் பொருள் என்ன?” என்று கூகுளில் தேடத் தொடங்கியதால் அவ்வார்த்தை வைரலானது.

சென்னையில் பிறந்த அமெரிக்க எழுத்தாளரும் மாடலுமான பத்மா லட்சுமி, “கமலா ஹாரிஸ் பேச்சைக் கேட்டு என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வருகிறது. என் மனம் முழுமையாக நிறைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தற்போதுவரை, அதிபர் தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் ஜோ பிடனே முன்னணியில் உள்ளார். இருப்பினும், இழுபறியில் உள்ள எட்டு மாகாணங்களில் மட்டும் 13 லட்சம் அமெரிக்க - இந்தியர்கள் வாக்களிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விசா நடைமுறையில் தளர்வு, இந்திய உறவுக்கு அதிக முக்கியத்துவம் - பிடன் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details