அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றிபெற்று, அந்நாட்டின் 46ஆவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருப்பினும், அதிபர் தேர்தலில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டிவரும் ட்ரம்ப், இதுவரை தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. இழுபறி மாகாணங்களாக கருதப்படும் பென்சில்வேனியா, நெவாடா, மிச்சிகன், ஜார்ஜியா, அரிசோனா ஆகிய மாகாணங்களின் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக அவர் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இருப்பினும், குடியரசு கட்சியின் பல்வேறு தலைவர்களும் ட்ரம்ப் தோல்வியடைந்துவிட்டதை தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொண்டர். இதனால்தான், தேர்தல் முறைகேடு குறித்து ட்ரம்பின் குற்றச்சாட்டிற்கு ஆதரவாக அவர்கள் குரல் கொடுக்கவில்லை.
தேர்தலில் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இரண்டு வாரங்களுக்குப் பின் நாடாளுமன்றத்திற்குத் திரும்பினார். அப்போது குடியரசு கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்தனர். குடியரசு கட்சித் தலைவர்கள் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்பதை இது குறிக்கிறது.