கோவிட்-19 தொற்று சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அங்குள்ள காட்டு விலங்குகளை விற்கும் ஒரு சந்தையிலிருந்து வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சீனாவில் இந்த வைரஸ் படிப்படியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கடந்த 10 நாள்களாக அங்கு ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. சீனாவிலுள்ள வூஹான், குவாங்சோ உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இயல்பு வழ்க்கைத் திரும்பிவருகிறது.
அமெரிக்காவில் நிலைமை என்ன?
இருப்பினும் சீனாவைத் தவிர மற்ற நாடுகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஈரான், இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்றால் கொடூரமாகப் பாதிக்கப்படைந்துள்ளன. அதிலும் குறிப்பாக வல்லரசு நாடாகக் கருதப்படும் அமெரிக்காவில் வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒருபுறம் கிருமி நாசினிகளை ஊசி மூலம் ஏன்செலுத்தக்கூடாது என்ற விசித்திர யோசனைகளை வழங்கிவருகிறார். மறுபுறம் வைரஸ் தொற்றுக்கு மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உறுதிசெய்யப்படாத நிலையில் இந்தியா அந்த மருந்தைத் தரவில்லை என்றால் பதிலடி தரப்படும் என்று எச்சரிக்கிறார்.
இதையும் படிங்க:கரோனா கடுமையாக பாதித்த நாட்டில் ஊரடங்கு தளர்வு!
இந்தக் கூத்துக்களுக்கிடையே அனைத்து மாகாணங்களும் பொருளாதாரத்தைக் கருத்தில்கொண்டு ஊரடங்கைத் தளர்த்த வேண்டும் என்று நெருக்கடியும் கொடுத்துவருகிறார இந்த முன்னாள் தொழிலதிபர். இருப்பினும் தற்போதுள்ள சூழ்நிலையில் அமெரிக்காவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
இருப்பினும் குடியரசு கட்சியினர் ஆளுநர்களாக இருக்கும் ஜார்ஜியா, ஓக்லஹோமா, அலாஸ்கா மாகாணங்களில் தொழில் துறையினருக்கு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் வைரஸ் பரவலைக் கருத்தில்கொண்டு தனது உடற்பயிற்சிக் கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என்று லையன்ஸ் டென் உடற்பயிற்சிக் கூடங்களின் நிர்வாக இயக்குநர் ஷான் கிங்ரிச் அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் நிலை?
வைரஸ் தொற்றால் அமெரிக்காவுக்கு அடுத்த மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடான இத்தாலியில் வரும் மே 4ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது. இருப்பினும் சுகாதாரப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள், போக்குவரத்து ஊழியர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கவுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.