கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று தற்போது 190-க்கும் மேற்பட்ட நாடுகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தத் தொற்றுக்கு எதிராகத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் முயற்சித்துவருகின்றனர்.
இந்த நிலையில், உலகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் புதிதாக ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 608 பேருக்கு கரோனா இருப்பது ஆய்வில் தெரியவந்தது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்து 31 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனாவால் நேற்று 4,788 பேர் உயிரிழந்துள்ளதன் மூலம், உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 66 ஆயிரத்து 812ஆக அதிகரித்துள்ளது.
இத்தொற்றால் இதுவரை 26 லட்சத்து 59 ஆயிரத்து 270 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா தீநுண்மியின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில் இன்று காலை நிலவரப்படி புதிதாக நான்கு பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் நான்கு பேரும் வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்குத் திரும்பியவர்கள் ஆவர்.
இதனால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 999ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 78 ஆயிரத்து 302 பேர் குணமடைந்த நிலையில் 4,634 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது சீனாவில் 63 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக 401 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கரோனாவால் அமெரிக்காதான் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை 17 லட்சத்து 93 ஆயிரத்து 530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து பிரேசிலில் நான்கு லட்சத்து 68 ஆயிரத்து 338 பேரும், ரஷ்யாவில் மூன்று லட்சத்து 87 ஆயிரத்து 623 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அந்நாட்டில் ஒரு லட்சத்து நான்காயிரத்து 542 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரிட்டனில் 38 ஆயிரத்து 161 பேரும், இத்தாலியில் 33 ஆயிரத்து 229 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 491 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,980 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:வூஹான் மட்டுமல்ல; கரோனா வைரஸ் பல இடங்களில் தோன்றியிருக்க வாய்ப்பு - சீனா அந்தர் பல்டி!