உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க பல நாடுகளும் தீவிரம் காட்டிவருகின்றன. சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய இப்பெருந்தொற்று தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. இதனால், கரோனாவுக்கு பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் நேற்று 89,776 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,88,356ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், இத்தொற்றால் நேற்று (மே 25) 1,185 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,47,873ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, இப்பெருந்தொற்றால் இதுவரை 23,65,719 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது உலகம் முழுவதும் 2,87,764 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இப்பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது.