உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நேற்று ஒரேநாளில் உலகம் முழுவதும் புதிதாக 75,020 பேருக்கு இத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,55,942ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், இப்பெருந்தொற்றால் உலகம் முழுவதும் நேற்று 3,464 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,87,332ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 34,095 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,27,496ஆக அதிகரித்துள்ளது.
இத்தொற்றால் அமெரிக்கா படுமோசமான நிலையில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 13,85,834 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 81,795 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஸ்பெயினில் 2,68,143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26,744 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இப்பட்டியலில் பிரிட்டன் மூன்றாம் இடத்திலும் ரஷ்யா நான்காம் இடத்திலும் உள்ளன.