சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கோவிட்-19 தொற்று இதுவரை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இத்தொற்றால் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயினனும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் உயிரிழந்துவரும் இத்தொற்றுக்கு தடுப்பு மருந்தைக் கண்டுப்பிடிக்க பல நாடுகளும் முயற்சித்துவருகின்றன.
இந்நிலையில், உலகளவில் நேற்று ஒரேநாளில் புதிதாக 80,707 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 6,594 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,37,388ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,84,235ஆகவும் அதிகரித்துள்ளது.
கோவிட்-19 தொற்றின் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதேசமயம், இத்தொற்றாலிருந்து இதுவரை 7,17,819 பேர் குணமடைந்துள்ளனர். கோவிட்-19 தொற்றால் அமெரிக்காவில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்நாட்டில் இதுவரை 8,49,092 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 47,681 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக இத்தாலியில் 25,085 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரையில், 21,393 பேர் பாதிக்கபட்டுள்ள நிலையில், 4,258 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 681 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு நாடுகளிலும் இத்தொற்று தற்போதுதான் ஆரம்பக் கட்டத்தை எட்டியுள்ளதால் இந்த நெருக்கடி எந்த நேரத்திலும் முடிவடையாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:உலக சுகாதார மையத்துடன் இணைந்து புதிய ஸ்டிக்கர்களை வெளியிட்ட வாட்ஸ் அப்!