சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் தொற்று, தற்போது பல்வேறு நாடுகளிலும் வேகமாகப் பரவிவருகிறது.
இதுவரை இந்த வைரஸ் தொற்றால் சுமார் மூன்று லட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக இத்தாலியில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதேபோல, பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 96 ஆயிரம் பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.
இந்த வைரஸ் தொற்று பெரும்பாலானவர்களுக்கு குறைவாகவோ அல்லது மிதமாகவோ பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், ஏற்கனவே உடல்நிலையில் பிரச்னை உள்ளவர்களுக்கும் முதியவர்களுக்கும் இந்தப் பாதிப்பு தீவிரமாகவுள்ளது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக நியூசிலாந்து முழுவதும் சுமார் நான்கு வாரங்கள் முடக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவித்தார். அந்நாட்டில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் இருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களும் அல்ல, வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களுடன் அவர்கள் தொடர்பிலும் இல்லை. இதனால் வைரஸ் தொற்று மோசமான நிலைக்குச் சென்றிருக்குமோ என்று அஞ்சப்படுகிறது.