நியூயார்க்:கரோனா தடுப்பூசி தயாரானாலும், இந்தாண்டு குறைந்த அளவிலான மருந்தே அமெரிக்காவில் விநியோகம் செய்ய முடியும் என நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையங்களின் இயக்குநர் (சிடிசி) டாக்டர் ராபர்ட் ரெட்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் இரண்டரை லட்சத்தைத் தாண்டுகிறது. கரோனாவால் சுமார் 2 லட்சம் பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர். கரோனாவை தடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.
கரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) அனுமதியளித்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா முழுவதும் இலவசமாக விநியோகம் செய்யப்படவுள்ளது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கரோனா தொற்றுக்கான தடுப்பூசி மருந்து கிடைத்தாலும், அமெரிக்க மக்கள் தொகையை கணக்கிட்டதில் குறைந்த அளவிலான மருந்துகளே விநியோகம் செய்ய முடியும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குநர் (சிடிசி) டாக்டர் ராபர்ட் ரெட்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " வரும் 2021ஆம் ஆண்டு கோடை வரை அமெரிக்க மக்களில் பெரும்பாலோருக்கு இந்த கரோனா தடுப்பூசி கிடைக்காது. மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தியதில் கரோனா தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்தாலும், 50 விழுக்காடுக்கு குறைவான மக்கள் தான் அதை பயன்படுத்தத் தயாராக உள்ளனர்.
இந்தாண்டு எந்த தடுப்பூசி மருந்து வந்தாலும் குறைந்த அளவிலான விநியோகமே செய்யப்படும். தடுப்பூசி போட விரும்பும் அமெரிக்காவில் உள்ள அனைத்து மக்களுக்கும் போதுமான COVID-19 தடுப்பூசி வைத்திருப்பது அமெரிக்க அரசாங்கத்தின் குறிக்கோள். அமெரிக்க சுகாதார நிறுவனங்கள் வரும் 2021 ஜனவரியில் அல்லது 2020 டிசம்பர் முற்பகுதியில் கரோனா தடுப்பூசி விநியோகத்தைத் தொடங்கி, அடுத்த கோடை காலத்திற்குள் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் முயற்சி செய்வார்கள். இம்முயற்சியில் பென்டகன் நிறுவனம் ஈடுபடும்.
பெரும்பாலான தடுப்பூசிகள், மக்களுக்கு 21 முதல் 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு அளவு தேவைப்படும். ஆனால், இரண்டும் ஒரே மருந்து தயாரிப்பாளரிடமிருந்து வர வேண்டும்" என்றார்.
முன்னதாக, கடந்த 2009-2010 ஆம் ஆண்டில் எச் 1 என் 1 தடுப்பூசியை விநியோகிக்க மெக்கெசனுடன் சி.டி.சி யின் விநியோகஸ்தர் ஒப்பந்தத்தின்படி, அதில் ஒரு தொற்றுநோய் காலக்கட்டத்தில் தடுப்பூசிகளை விநியோகிப்பதற்கான ஒரு விருப்பத்தை உள்ளடக்கியது. மெக்கெசனால் குளிரூட்டப்பட்ட (2–8 டிகிரி செல்சியஸ்) மற்றும் உறைந்த (-20 டிகிரி செல்சியஸ்) தடுப்பூசிகளின் அளவை விரைவாக விநியோகிக்க முடியும்.