அமெரிக்காவை சேர்ந்த கேத்ரின் சல்லிவன் (வயது 68), 1984ஆம் ஆண்டில் நாசாவிலிருந்து விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி ஆவார். இவர் நாசாவில் பணியாற்றிய காலத்திலே மூன்று முறை விண்வெளிக்கு சென்று வந்துள்ளார். பின்னர், தனது ஓய்வுக்குப் பிறகு கடல் மீதான ஆர்வத்தில் என்ஓஏஏ (National oceanic atmospheric Administration) நிறுவனத்தில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றத் தொடங்கினார்.
அப்போது அவர், பசிஃபிக் பெருங்கடலின் ஆழமான பகுதியும், உலகின் ஆழமான பகுதியுமான மரியானா அகழியில் உள்ள செலஞ்சர் முனைக்கு சென்று படம் பிடிக்க முடிவு செய்தார். இதற்காக பூமியின் ஐந்து பெருங்கடல்களில் உள்ள ஆழமான இடங்களைப் பார்வையிட உருவாக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப நீர்மூழ்கிக் கப்பலான 'லிமிட்டிங் காரணி' கப்பலில் பயணம் செய்தார்.