ஃபைஸர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு பிரிட்டன், பஹ்ரைன், கனடா ஆகிய நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளன. வரும் சில வாரங்களில் மேலும் பல நாடுகளும் ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் அந்நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்தின் அவரச பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கலாம் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் வல்லுநர் குழு பரிந்துரை அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து வரும் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை ஃபைஸ்ரின் கரோனா தடுப்பு மருந்திற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இன்னும் சில நாள்களிலேயே மாடர்னா நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்திற்கும் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபைஸர் நிறுவனத்திடம் இருந்து 10 கோடி தடுப்பு மருந்து டோஸ்களை பெறும் வகையில் ட்ரம்ப் அரசு கடந்த ஜூலை மாதம் அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
அதேபோல, மாடர்னாவின் தடுப்பு மருந்து சோதனைகளுக்கும் பெரியளவில் அமெரிக்க அரசு உதவியுள்ளது. இதனால், மாடர்னா தடுப்பு மருந்தும் முதலில் அமெரிக்காவுக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் குறைந்தபட்சம் 70 விழுக்காடு மக்களுக்கு தடுப்பு மருந்தை அளிப்பதன் மூலமே Herd immunityஐ பெற முடியும். அப்போதுதான் வைரஸ் பரவல் கட்டுக்குள் வரும். சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு மக்களுக்கு தடுப்பு மருந்தை வழங்குவதன் மூலம், வைரஸ் பரவல் சங்கிலியை உடைக்கும் முறையே Herd immunity எனப்படும்.
இதையும் படிங்க: எகிப்து வந்தடைந்த சீனாவின் கரோனா தடுப்பூசி மருந்து!