அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. அமெரிக்கத் தேர்தல்களில் வாக்குப்பதிவு முடிந்தவுடன், தேர்தல் முடிவுகள் உடனடியாகத் தெரிய தொடங்கிவிடும்.
இதற்கு மாறாக, வெள்ளை மாளிகையை மீண்டும் பிடிக்கப்போவது குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்பா, இல்லை ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுமார் 10 கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் தங்கள் வாக்குகளை அஞ்சல் வழியாக செலுத்தினர். இதன்காரணமாக எல்லா வாக்குகளையும் எண்ணி முடிப்பதற்கு தாமதமாவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்கா தேர்தல் முடிவுகள் குறித்து ஊடகங்களில் வெளியாகும் அறிவிப்புகளை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தங்களின் பிரதான செயலிகளில் வெளியிடப்படும் என்று பேஸ்புக் அறிவித்துள்ளது.
"அமெரிக்காவின் பல மாநிலங்களில் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் எங்கள் தயாரிப்புகள் முழுவதும் நம்பகமான தகவல்களை வழங்க நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்த நினைவூட்டலைப் பகிர்ந்து கொள்ள விரும்பினோம்" என்று பேஸ்புக் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்தி ஊடகங்களில் பெரும்பான்மையாக அதிபர் தேர்தல் வெற்றியாளர் குறித்த செய்தி வெளியானால், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தேர்தல் அறிவிப்புகளை, அதிபர் தேர்தல் வெற்றியாளருடன் வெளியிடுவோம் எனத் தெரிவித்துள்ளது. நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு முன்னர் பேஸ்புக் தனது தளங்களில் தவறான தகவல்களை பரப்புவதைக் குறைக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.