கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு அளிக்கும் பணிகள் இன்னும் சில வாரங்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தின் அவசரப் பயன்பாட்டிற்கு பிரிட்டன் ஒப்புதல் வழங்கியுள்ளது. அமெரிக்காவும் இன்னும் சில நாள்களில் ஏதேனும் ஒரு கரோனா தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், மறுபுறம் கரோனா குறித்த போலி செய்திகளும் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகப் பரவத் தொடங்கியுள்ளது. இது மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்து குறித்து எதிர்மறையான கருத்தைப் பரப்பும் என்று அஞ்சப்படுகிறது. இவ்வாறு மக்கள் பலரும் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள மறுத்தால் கரோனாவைத் தடுக்க முடியாமல் போகும்.
இந்நிலையில், கரோனா தடுப்பு மருந்து குறித்து பரவும் போலி செய்திகளை நீக்க திட்டமிட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் வாரங்களில் பொது சுகாதார வல்லுநர்களால் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில் தடுப்பு மருந்து குறித்த தவறான கருத்துகளை நீக்கும் பணிகள் தொடங்கப்படும்.