தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அதிபர் பொய் சொல்கிறார் என்று கூறுவது தவறு - ட்விட்டருக்கு எதிராகக் களமிறங்கும் ஃபேஸ்புக்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் ட்வீட்களை உண்மையானதா என்று சரி பார்த்தது தவறு என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

Mark Zuckerberg
Mark Zuckerberg

By

Published : May 28, 2020, 7:18 PM IST

இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் கோவிட்-19 தொற்று காரணமாக, முற்றிலும் தபால் மூலம் நடக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் தேர்தல் தபால் மூலம் நடைபெறக் கூடாது என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துவருகிறார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில், "தபால் மூலம் வாக்களிக்கும் முறையில் பல்வேறு மோசடிகள் நடைபெறும். தபால் வாக்குகள் திருடப்படலாம். ஏன் போலியான தபால் வாக்குகள் அச்சடிக்கப்படலாம். கலிபோர்னியா மாகாணத்தில் பல லட்சம் பேர் எவ்வாறு குடியேறினார்கள் என்பது கூட விசாரிக்கப்படாமல் அவர்களுக்குத் தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இது ஒரு மோசடியான தேர்தல்!" என்று பதிவிட்டார்.

இந்த ட்வீட்களின் கீழே போலியான ட்வீட்களுக்கு வழங்கப்படும் எச்சரிக்கையையும் தபால் வாக்குகள் குறித்து உண்மையான தகவல்களை அளிக்கும் இணைப்பையும் ட்விட்டர் இணைத்தது. ட்விட்டரின் இந்தச் செயலை அமெரிக்க அதிபரும் குடியரசுக் கட்சியினரும் கடுமையாக எதிர்த்துவருகின்றனர். குறிப்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டெக் நிறுவனங்களுக்கு விரைவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் ரீதியில் கருத்து பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் ஃபாக்ஸ் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், ட்விட்டரின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தார். இது குறித்துப் பேசிய அவர், "இணையத்தில் அனைவரும் உண்மையைத்தான் பேசுகிறார்களா என்பதை ஃபேஸ்புக் மதிப்பீடு செய்யக் கூடாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

இந்த விஷயத்தில் எங்கள் கொள்கை ட்விட்ரிலிருந்து வேறுபட்டது. தனியார் நிறுவனங்கள், குறிப்பாக டெக் நிறுவனங்கள், இதைச் (போலிச் செய்திகளை குறிப்பிடுவது) செய்யக்கூடாது. அதேபோல், இதற்காக சமூக வலைத்தள நிறுவனங்கள் மீது அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.

ஃபாக்ஸ் செய்தி சேனலில் நடைபெற்ற மற்றொரு விவாதத்தில் பங்கேற்ற ட்ரம்பின் ஆலோசகர் கெல்லியன்னே கான்வே (Kellyanne Conway), ட்விட்டரின் இந்தச் செயலுக்கு அந்நிறுவனத்தின் தள ஒருமைப்பாட்டிற்கான தலைவர் யோயல் ரோத் தான் காரணம் என்று தெரிவித்தார். இதையடுத்து குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் யோயல் ரோத்துக்கு எதிரான கருத்துக்களை இணையத்தில் பதிவிடத் தொடங்கினர்.

இது குறித்து விளக்கமளித்துள்ள ட்விட்டர், "எங்கள் கொள்கைகளுக்கு ட்விட்டர் ஊழியர்கள் யாரும் பொறுப்பில்லை. மேலும் நிறுவனத்தின் முடிவுகளுக்காகத் தனிப்பட்ட ஊழியர்களைத் தாக்குவது துரதிர்ஷ்டவசமானது" என்று பதிவிட்டுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் ட்விட்டருக்கு எதிரான கருத்துகளைக் கூறியிருந்தாலும், எந்த இடத்திலும் அமெரிக்க அதிபர் கூறியது சரி என்று தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'மூச்சு விட முடியல' என்று கதறிய பின்னரும் விடாத போலீஸ் - உயிரிழந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்

ABOUT THE AUTHOR

...view details