அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனம், ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பூசிக்கு உலகிலேயே முதல் நாடாக பிரிட்டன் ஒப்புதல் வழங்கியுள்ளது. மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசி 94.5 விழுக்காடு பலனளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், அவசரப் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கக் கோரி அந்நிறுவனம் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளது.
இந்நிலையில், பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மக்கள் முன்னிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளவுள்ளனர்.
'தி ஜோ மேடிசன் ஷோ' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அதிபர் ஒபாமா, "கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது நான் அதை எடுத்துக் கொள்கிறேன். தொலைக்காட்சியிலோ அல்லது வீடியோ மூலமாகவோ நான் கரோனா மருந்து எடுத்துக் கொள்வது ஒளிபரப்பப்படும். நான் அறிவியலை நம்புகிறேன். அதனை மக்களுக்கு உணர்த்துவதற்காக நான் இதை செய்யவுள்ளேன். ஆனால், தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதற்கு சில காலம் தேவைப்படும்" என்றார்.