கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்காதது ஈக்வடார் நாட்டை மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது. பொது மக்கள் தனி நபர் விலகலை முறையாகக் கடைப்பிடிக்காத காரணத்தினால், அந்நாட்டில் பெரிய சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிலைமையை மேலும் மோசமாகியுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்களைப் புதைக்க சவப்பெட்டிகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் உடல்களை நடைபாதைகளிலேயே போட்டுச் செல்லும் அவலநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். கோவிட்-19 வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட குயாகுவில் என்ற பகுதியில் நிலைமை மிகவும் சிக்கலாகியுள்ளது.
1.7 கோடி மக்களைக் கொண்ட ஈக்வடார் நாட்டில்தான் கோவிட்-19 வைரஸ் தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரிக்கவுள்ளது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக ஈக்வடார் நாட்டிற்கும் ஸ்பெயின் நாட்டிற்கும் வலுவான பந்தம் உள்ளது. சொல்லப்போனால், ஈக்வடார் நாட்டின் அலுவல் மொழியாகவே ஸ்பேனிஷ் மொழி உள்ளது. தற்போது கோவிட்-19 வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளான ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஈக்வடார் நாட்டு மக்கள் செல்வது வழக்கம்.
கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி, 70 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஈக்வடார் நாட்டிலுள்ள குயாகுவில் என்ற பகுதிக்கு வந்துள்ளார். அவருக்கு கோவிட்-19 வைரஸ் அறிகுறிகள் இருந்ததையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவருடன் தொடர்பு கொண்ட 80 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அதேபோல, ஸ்பெயினில் வைரஸ் தொற்று பெரியளவில் பரவத் தொடங்கியதும், அங்கு படித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் ஈக்வடார் திரும்பினர். ஸ்பெயினிலிருந்து திரும்பிய சிலர் குயாகுவில் பகுதியில் நடைபெற்ற திருமண விழா உள்ளிட்ட சில விழாக்களில் பங்கேற்றனர். இது நிலைமையை மேலும் மோசமாக்கியது.
இதைத்தொடர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என ஈக்வடார் அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் உதவித் தொகையாக மாதமாதம் 60 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.