இயற்கை நமக்கு பல அதிசயங்களை அடையாளம் காண்பித்துக் கொண்டே இருக்கிறது. அவ்வப்போது வானில் தோன்றும் வால் நட்சத்திரங்களும் கிரகணங்களும் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. அந்த வகையில், செவ்வாய் கிரகத்திற்கும் வியாழன் கிரகத்திற்கும் இடையே ’சீரிஸ் என்ற சிறிய கோள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து நாசாவின் ’டான்’ விண்கலத்தின் சமீபத்திய தரவு அறிக்கையின்படி, அந்த சிறிய கிரகம் பாறைகளின்றி நீர் நிறைந்து இருப்பதைக் காட்டுகிறது. கிடைத்த தரவுகளை ஆராய்ந்ததில், சீரிஸின் மேற்பரப்பிற்கு அடியில், உப்பு அல்லது உப்பு செறிவூட்டப்பட்ட ஆழமான நீர்த்தேக்கம் இருக்கக்கூடும். அது சுமார் 40 கி.மீ ஆழமும் நூற்றுக்கணக்கான மைல் அகலமும் கொண்டதாக உள்ளது எனத் தீர்மானித்துள்ளனர்.
இதுதொடர்பாக நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் மிஷன் இயக்குனர் மார்க் ரேமான் கூறுகையில், "டான் விண்கலம் அதன் கிரகப் பயணத்தை மேற்கொள்ளும்போது நாங்கள் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக சாதித்தது. அதன், முடிவில் கிடைத்த அற்புதமான கண்டுபிடிப்புகள் வியக்க வைத்தது. சீரிஸ் கிரகம் பூமியின் சந்திரனை விட மிகச் சிறியது. டான் விண்கலம் 2015இல் சீரிஸில் வந்து சேர்ந்தது. விண்கலம் சீரிஸுக்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, தொலைநோக்கிகள் மூலம் அங்கு பிரகாசமான பகுதிகள் இருப்பதை விஞ்ஞானிகள் கவனித்தனர்.
மேற்ப்பரப்பில் உள்ள உப்புநீர், அடியில் உள்ள கடல் நீரிலிருந்து வந்தது என்பதும் புதிய ஆராய்ச்சியில் தெரிய வந்தது. ஆராய்ச்சியின் முடிவில், இந்தப் பிரகாசமான பகுதிகள் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு குறைவானவை என்பதையும், இங்கு புவியியல் செயல்பாடு தொடர்ந்து நடைபெறக்கூடும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.