அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடவுள்ளார்.
இந்தச் சூழலில், ஜோ பிடன், அவரது மகன் ஹண்டர் பிடன் ஆகியோர் உக்ரைன் நாட்டில் செய்துவரும் தொழில் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஸெலென்ஸ்கியை வற்புறுத்தி, நெருக்கடி கொடுத்ததாக அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிபர் டிரம்ப் தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதோடு, அந்நிய நாட்டிடம் ரகசியமாக உதவி கேட்டதன் மூலம் தேசியப் பாதுகாப்புக்கு பங்கம் விளைவித்ததாகக் கூறிய ஜனநாயகக் கட்சியினர் அவருக்கு எதிராகப் பதவிநீக்க விசாரணையை மேற்கொண்டனர்.
இதன் விளைவாக, டிரம்புக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம் உருவாக்கப்பட்டு அது அமெரிக்க கீழ் சபையான பிரதிநிதிகள் சபையில் கடந்த மாதம் நிறைவேறியது.
பின்னர், நீண்ட இழுபறிக்குப் பிறகு இந்தத் தீர்மானம் அமெரிக்க மேல் சபையான செனட் சபையில் கொண்டுவரப்பட்டு நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.