உலகின் நுரையீரலாகக் கருதப்படும் அமேசான் காடுகள் கடந்த சில ஆண்டுகளாக வேகமாக அழிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், கோவிட்-19 பரவல் காரணமாக அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்படும் விகிதம் இரட்டிப்பாகியுள்ளதாகப் பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 248 சதுர கிலோமீட்டர் பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டதாகவும், இந்தாண்டு ஏப்ரல் மாதம் 405 சதுர கிலோமீட்டர் பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை முறைகேடாகக் காடுகள் அழிக்கப்படுவது 55 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக மிகக் குறைந்த அளவே பாதுகாப்புப் படையினர் காடுகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், முறைகேடாகக் காடுகள் அழிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.