கோவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பல நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் ஐ.நா. சார்பில் ‘நிலையான அபிவிருத்தி இலக்கு’ என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடத்தப்பட்டது. அதில் பேசிய ஐ.நா. துணை பொதுச்செயலாளர் அமினா முகமது, கடன் வழங்கும் முறையை மறுசீரமைப்பு செய்வதே நமது முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.
இது குறித்து பேசிய அமினா முகமது, "நமக்கு நிறைய மூலதனங்கள் தேவை. பொருளாதாரத்தைச் சீரமைக்கப் பல நாடுகளும் திட்டங்களை அறிவித்துவருகின்றன. அமெரிக்கா 2 டிரில்லியன் டாலர்கள் மதிப்புடைய திட்டத்தை அறிவித்துள்ளது.
அதேபோல, ஜப்பானும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 விழுக்காட்டை இதற்கு ஒதுக்குவதாக அறிவித்துள்ளது. தனது குடிமக்கள் வீட்டிலேயே இருந்தால் அவர்களின் 80 விழுக்காடு ஊதியத்தை வழங்குவதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
டிரில்லியன் டாலர்கள் மதிப்புடைய இத்திட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் முடிவு செய்யப்பட்டவை. இருப்பினும், பல பில்லியன் டாலர்கள் கடனாக இருக்கும். அதற்கு பல திட்டங்கள் வேண்டும். இதுபோன்ற திட்டங்கள் வெறும் தொடக்கம்தான். நிலைமையைச் சமாளிக்க நமக்கு இதுபோல பல டிரில்லியன்கள் தேவைப்படும்.
அதேபோல் அறிவிக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு திட்டங்கள் அனைத்து தரப்பிலான மக்களையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.