கோவிட்-19 பாதிப்பு சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, வளர்ந்த நாடான அமெரிக்கா இந்த கரோனா தொற்றால் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது.
இந்நிலையில், கரோனா ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து யேல் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த குறைந்த வருமானம் கொண்ட பெண்களிடம் ஆய்வுகளை மேற்கொண்டனர். 2005இல் கத்ரீனா சூறாவளி ஏற்பட்டதிலிருந்து, இப்பகுதியிலுள்ள பெண்களிடம் யேல் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்வது வழக்கம்.
இந்த ஆய்வில், 2005இல் கத்ரீனா சூறாவளி ஏற்பட்டபோது இப்பகுதியிலுள்ள பெண்கள் எந்தளவு மன அழுத்தத்திற்கு உள்ளானார்களோ, அதே அளவுக்கு கரோனா பரவல் காரணமாக தற்போதும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், கத்ரீனா சூறாவளி ஏற்படுத்திய உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் என்பது 12 ஆண்டுகள் வரை நீடித்ததாகவும், அதேபோல இந்த கரோனா ஏற்படுத்தும் பாதிப்புகளும் நீண்ட காலம் நீடிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.