உலகெங்கும் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே இருக்கிறது. கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும பணிகளில் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜெனீவாவிலுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், "இந்த (கரோனா) தொற்று இரண்டு ஆண்டுகளுக்குள் முடியும் என்று நம்புகிறோம்.
1918ஆம் ஆண்டு பரவிய கொடிய ஸ்பானிஷ் ப்ளூவைவிட வேகமாக இந்த தொற்று முடிவுக்குவரும். அந்த காலத்துடன் ஒப்பிடுகையில், உலகமயமாக்கல் காரணமாக தற்போது நாம் சில சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம். உலகமயமாக்கல் காரணமாக உலகம் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இதனால் கரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் உலகம் முழுவதும் பரவியது.
ஆனால், இப்போது உலகம் அதே தொழில்நுட்பத்தின் உதவியுடன் கரோனா வைரஸை எதிர்கொண்டுள்ளது. நமக்கு இருக்கும் தொழில்நுட்பத்தை அதிகபட்சமாக பயன்படுத்துவதன் மூலமும், தடுப்பு மருந்துகளை விரைவாக கண்டுபிடிப்பதன் மூலமும் 1918ஆம் ஆண்டு பரவிய ஸ்பானிஷ் ப்ளூவைவிட குறுகிய காலத்தில் கரோனா பரவலை தடுத்து நிறுத்த முடியும்" என்றார்.
ஸ்பானிஷ் ப்ளூ அமெரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன் பின் உலகம் முழுவதும் பரவிய இந்தத் தொற்று காரணமாக, 1918-2020 வரை 50 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஐந்து கோடி பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது முதலாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைவிட ஐந்து மடங்கு அதிகமாகும்.
உலகெங்கும் தற்போது வரை 2 கோடியே 31 லட்சத்து 41 ஆயிரத்து 122 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 லட்சத்து 3 ஆயிரத்து 551 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'வெளியேறும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும்' - உலக சுகாதார அமைப்பு கோரிக்கை