உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்றால், இதுவரை 210க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 47 லட்சத்து 37 ஆயிரத்து 702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 3 லட்சத்து 13 ஆயிரத்து 636 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அதிகாரப்பூர்வமாக உலகச் சுகாதார அமைப்பு உறுதிசெய்துள்ளது.
கரோனா அச்சுறுத்தலால் உலகளாவிய பயணங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு விட்டு நாடு செல்லும் துயரம் தற்போதும் அரங்கேறி வருவதாக ஐநா போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலகம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா வைரசால் அனைத்து வகை போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், உள்நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள மோதல்கள், வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றிலிருந்து தப்பிக்க நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் நிலை இன்னும் மாறவில்லை.
எனவே மிகவும் பின்தங்கிய நாடுகளிலிருந்து பிற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்கள் நோக்கி நமது கவனத்தைச் செலுத்த வேண்டும். உயிருக்கு ஆபத்தான இந்த பயணத்தை ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்பிரிக்கா, குறிப்பாக ஆசிய பிராந்தியங்களைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் மேற்கொள்கின்றனர்.
ஊரடங்கு காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மத்திய கிழக்கு தரைக் கடல் பாதை முற்றிலுமாகத் தடைப்பட்டுள்ளது. இதேபோன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மத்திய மேற்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதனை மீறி இந்த ஆபத்தான பயணங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கட்டுப்பாடுகள் கூடியிருப்பதால் இந்தப் பயணங்களுக்கான செலவும் அதிகரித்துள்ளது.
உலகளாவிய பொருளாதார நெருக்கடி, வறுமை, வேலையின்மை என பல்வேறு காரணங்களுக்காக பல நாடுகளில் உள்ள மக்கள் சட்டத்திற்குப் புறம்பாக எல்லை தாண்டிய பயணத்தை மேற்கொள்கிறார்கள். இப்பயணங்களுக்கு ஏற்பாடு செய்யும் நபர்களால் அப்பாவி மக்கள் குறிவைக்கப்படுவதற்கான வாய்ப்புகளை கரோனா நெருக்கடி மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் தங்களது உள்நாட்டுப் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து மீட்டால், எல்லை தாண்டிய மக்களின் நகர்வை நிச்சயம் தவிர்க்கச் செய்யல்லாம். அகதிகள், புலம்பெயர்ந்தோருக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்குவதன் மூலமாகவும், அவர்களின் உரிமைகளை உறுதிசெய்வதன் மூலமாகவும் சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய பயணத்திலிருந்து மக்களை நம்மால் பாதுகாக்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :அணு உலைகளை வெடிவைத்து தகர்த்திய ஜெர்மனி