கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பலரும் வீடுகளிலே முடங்கியுள்ளனர். இச்சமயத்தில் வேலையின்மையும், பசியும் மக்களை வாட்டி வதைக்கின்றன. பல குடும்பங்களில் ஏற்பட்டுள்ள வறுமை, குழந்தைத் தொழிலாளர்களை அதிகளவில் உருவாக்கிவருகிறது.
இதுகுறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் ஜெனரல் கை ரைடர் கூறுகையில், “கரோனா குடும்ப வருமானத்தை அழித்துள்ளால், வேறு வழியின்றி பல குடும்பத்தினர் தங்களது குழந்தைகளை வேலைக்கு அனுப்ப வாய்ப்புள்ளது” என்றார்.
இதுதொடர்பாகப் பேசிய யூனிசெஃப் (ஐக்கிய நாடுகளின்குழந்தைகள்நிதியம்) நிர்வாக இயக்குநர் ஹென்றிட்டா ஃபோர், "நெருக்கடி காலங்களில் பலர் குடும்ப வறுமையைச் சமாளிக்க குழந்தைகளை வேலைக்கு அனுப்பிவைப்பர். ஊரடங்கால் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள் தொழிலாளர்களாக மாறுவது அதிகரித்துள்ளது.
கரோனாவுக்குப் பிந்தைய உலகத்தைப் பார்க்கும்போது குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் தேவையான அடிப்படை வசதி உள்ளதா என்பதைக் கவனிப்பது அவசியம். தரமான கல்வி, சமூகப் பாதுகாப்புச் சேவைகள், சிறந்த பொருளாதார வாய்ப்புகள் ஆகியவைதான் மக்களின் வாழ்க்கையை மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் பல குழந்தைகள் ஆபத்தான வேலைக்குத் தள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவித்தார்