கரோனா வைரஸ் நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அங்கன்வாடிகளில் பயிலும் 2.8 கோடி சிறார்களைச் சேர்த்து 24.7 கோடி பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. தெற்காசியாவில் உள்ள 60 கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் தகவல் தெரிவிக்கிறது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் 24.7 கோடி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடிகளில் பயிலும் 2.8 கோடி சிறார்களின் கல்வியில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்கு முன்பே 60 லட்சம் மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருந்தனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையதளம், மொபைல் செயலி, தொலைக்காட்சி, வானொலி போன்ற சேவைகள் மூலம் மாணவர்களின் கல்வியை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாற்று கல்வியாண்டை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயார் செய்துள்ளது. அவர்கள் வீட்டிலிருந்து பயிலும் வகையில் வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் 24 விழுக்காடு வீடுகளில் மட்டுமே இணைய வசதி உள்ளது. அதிலும், கிராமப்புற மாணவர்களுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு போதுமான இணைய வசதி செய்துத் தரப்படவில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குழந்தை பாதுகாப்பை பொறுத்தவரை, மார்ச் 20 முதல் ஏப்ரல் 10 வரையிலான 21 நாள்களில் 'CHILDLINE' சேவைக்கு 4,60,000 புகார்கள் வந்துள்ளன. இது, 50 விழுக்காடு அதிகமாகும்.
இதையும் படிங்க: 'பயங்கரவாதிகளின் புகலிடமாகத் பாகிஸ்தான் திகழ்கிறது' - அமெரிக்கா