கரோனா வைரஸ் காரணமாக, உலகம் முழுவதும் பொது மக்கள் பல்வேறு பாதிப்புகளை அடைந்துள்ளனர். இதுவரை 43 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சத்து 92க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள பல்வேறு நாடுகளிலும் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக செயல்பட்டுவருகின்றனர்.
இதனிடையே கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் நிறுவனம் சார்பாக, உலகின் முன்னணி மருந்து நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்நிறுவனத்தின் சார்பாக ஆராய்ச்சியாளர்களுக்கு சில பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து எஃப்டிஏ (FDA) ஆணையர் ஸ்டீஃபன் எம்.ஹான் பேசுகையில், '' கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பாதுகாப்பான சிகிச்சைகளை எஃப்டிஏ துரிதப்படுத்தியுள்ளது. அதனை முக்கியக் குறிக்கோளாக வைத்து பணிபுரிந்து வருகிறோம். மருத்துவ உபகரணங்கள் அனைவருக்கும் வேகமாக கிடைக்க எங்களிடம் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தியுள்ளோம். தற்போது கரோனாவுக்கு எதிராக செய்யப்படும் ஆராய்ச்சியாளர்களுக்கு, எங்கள் சார்பாக சில பரிந்துரைகளை அளிக்கிறோம்.