புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது அவர்களது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது. மேலும் அவர்கள் குணமடைவதற்கான அறிகுறிகளும் தெரிகிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோவிட்-19 வைரஸ் தடுப்பூசி உருவாக்க சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. அதற்குள் புதிய பாதிப்புகள் காட்டுத் தீ வேகத்தில் அதிகரித்துவருகின்றன.
குறிப்பாக அமெரிக்காவின் நியூயார்க் கடும் பாதிப்பில் உள்ளது. ஆகவே டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மருத்துவர்கள் கோவிட்-19 பெருந்தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நபருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சையை பரிந்துரைத்தனர்.
இந்தச் சிகிச்சை முழுமையாக பயனுள்ளதாக என தெரியவில்லை. இருப்பினும் மருத்துவர்கள் ஒரு பழைய நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய சிகிச்சையைப் பரிசோதித்து வருகின்றனர்.
இந்தச் சிகிச்சை கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவரின் பிளாஸ்மாவை பிரித்தெடுத்து, வைரஸால் கடுமையாக தாக்குதலுக்குள்ளான நபர்களுக்கு அளிக்கப்படுகிறது.
கோவிட்-19 வைரஸூக்கு எதிராக தடுப்பூசி இல்லாத நிலையில், டாக்டர்களும் விஞ்ஞானிகளும், “சுறுசுறுப்பான பிளாஸ்மா சிகிச்சையை” பரிந்துரைக்கின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் கோவிட்-19 வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூன்று இந்தியர்களுக்கு இந்தச் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர்கள் நலமுடன் இருப்பதாகவும், நோய் பாதிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சிகிச்சைக்கு பிளாஸ்மாவை தானம் செய்பவர், “ஆரம்பத்தில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து குணமாகி 14 நாள்களுக்கு அந்த நோய் பாதிப்பு திரும்பாமல் இருக்க வேண்டும்.
மேலும் இருவரும் ஒரே ரத்த வகையை சேர்ந்தவர்களாக இருத்தல் அவசியம். மருத்துவத் துறையில், தடுப்பூசி உருவாக்கப்படுவதற்கு முன்பு தொற்று நோய்களை எதிர்த்து பிளாஸ்மாவைப் பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல.
1979 ஆம் ஆண்டில் ரத்தக்கசிவு காய்ச்சலுக்கும், 1918 இல் ஸ்பானிஷ் காய்ச்சலுக்கும் சிகிச்சையளிக்க இந்த நுட்பம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் கினியா, சியரா லியோன் மற்றும் லைபீரியாவில் 2014 ஆம் ஆண்டில் எபோலாவுக்கு சிகிச்சையளிக்க சுறுசுறுப்பான பிளாஸ்மா பயன்படுத்தப்பட்டபோது அது பயனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.