சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கோவிட்-19 தொற்று, தற்போது 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் இயற்கையாக உருவானதல்ல. வூஹான் நகரிலுள்ள கிருமியியல் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து இது பரவியது என்ற தகவல் பரவியது. இந்தத் தகவல்களை ஆய்வாளர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் ட்ரம்ப் கோவிட்-19 வூஹான் நகரிலுள்ள ஆய்வுக் கூடத்திலிருந்து பரவியதாகத்தான் தான் நம்புவதாகக் கூறினார். இருப்பினும் அது குறித்து மேலும் தகவல்களை அளிக்க அவர் மறுத்துவிட்டார்.
எந்த அடிப்படையில் வைரஸ் கிருமியியல் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து பரவியதாக குற்றம்சாட்டுகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அதை என்னால் கூற முடியாது. அதை சொல்ல எனக்கு அனுமதியில்லை" என்றார்.
'வைரஸ் பரவலுக்குச் சீன அதிபர் ஜி ஜின்பிங் பொறுப்பேற்க வேண்டுமா?’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நான் அப்படிச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், வைரஸ் பரவலை நிச்சயம் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். வைரஸ் தொற்று சீனாவிலிருந்துதான் மற்ற நாடுகளுக்குப் பரவியது. இதை அவர்கள் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் என்றுதான் உலகமே கருதுகிறது."