தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பெருகிவரும் ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அந்நாட்டு அரசு மீது அதிருப்தி அடைந்துள்ள மக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்குமிடையே நடக்கும் மோதலில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என கொலம்பியா அரசு உறுதியளித்துள்ளது.
தலைநகர் பொகோடாவில் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தடையை மீறி அந்நகரில் இன்று அதிகாலை (உள்ளூர் நேரப்படி) போராட்டக்காரர்கள் போக்குவரத்து சேவைகளை முடக்க முயன்றனர். இதை அறிந்த காவல் துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி அவர்களை விரட்டியடித்தனர்.