கரோனா வைரஸின் பிறப்பிடமாக சீனா இருந்தாலும், அதன் மையப்பகுதியாக தற்போது அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மாறியுள்ளன.
கடந்தாண்டு இறுதியில் வூஹானில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸால் உலகளவில் இதுவரை 1,16,03,942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5,37,713 பேர் உயிரிழந்த நிலையில் 65,69,952 பேர் இத்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இப்பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. அமெரிக்காவில் 29,86,190 பேரும், பிரேசிலில் 16,04, 585 பேரும், இந்தியாவில் 6,97,413 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கரோனா வைரஸை சீனா சிறப்பாக கையாண்டது என முதலில் அந்நாட்டை பாராட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பின்னர் தனது கருத்துக்களை பின்வாங்கிக் கொண்டு கரோனா விவகாரத்தில் சீனா வெளிப்படைத்தன்மையை மறைத்ததாக அவர் தொடர்ந்து குற்றஞ்சாட்டியுள்ளார்..
அந்த வகையில், இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சீனா அமெரிக்காவிற்கு மட்டுமில்லாமல் உலகிற்கே பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என பதிவிட்டுள்ளார்.