கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "சீனா இப்போது ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு தயாராக வேண்டும். நான் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றி பெறும்வரை காத்திருந்தால் அது இன்னும் கடினமாக இருக்கும்" என்று சீனாவை எச்சரித்தார். அப்போதுதான் முக்கியமான வர்த்தகங்களில் அமெரிக்காவிற்கு வழங்க எந்த சலுகையும் இல்லை என்று சீனா அறிவித்திருந்தது.
இரண்டு பெரிய பொருளாதார சக்திகளுக்கு இடையிலான பிளவு, உலகளாவிய பொருளாதார மந்தநிலையைத் தூண்டிவிடக்கூடிய நேரத்தில், அமெரிக்காவும் சீனாவும் யதார்த்தத்தை உணர்ந்து இறுதியாக ஒரு முடிவை எடுத்துள்ளன. முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்குள் நிலவிய பதற்றங்களை குறைத்துக்கொண்டுள்ளன. இதன் மூலம் சர்வதேச பொருளாதரம், இன்னும் சிறிது காலத்துக்கு நல்ல நிலையில் இருக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
அதிபர் டிரம்ப் மற்றும் சீன துணைப் பிரதமர் லீ ஆகியோர் கையெழுத்திட்ட 86 பக்க ஒப்பந்தத்தின்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து 20,000 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருள்களை கூடுதலாக கொள்முதல் செய்ய சீனா ஒப்புக் கொண்டுள்ளது. இது 2018இல் உருவான 42,000 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக பற்றாக்குறையை குறைக்கிறது. அதேபோல், சீனாவிலிருந்து வரும் 12,000 பில்லியன் டாலர் பொருள்களுக்கு 50 விழுக்காடு வரை வரிகளை குறைக்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி கூடுதல் வரிகளை வசூலிக்கும் திட்டங்களையும் ரத்து செய்தது.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களுக்குப் பின்தான், மிக முக்கியமான மற்றும் தீவிரமான விஷயங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு முக்கிய சக்திகள், சர்வதேச நிர்பந்தம் காரணமாகவே இப்போது இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதை இது குறிக்கிறது. இந்த ஒப்பந்தம், வளரும் நாடுகளின் பொருளாதாரத்துக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
சோவியத் யூனியனுடனான பனிப்போர் முடிவடைந்ததையடுத்து, 1992இல் அமெரிக்கா உருவாக்கிய பாதுகாப்பு கொள்கை மூலம், ஒரு 'வெல்ல முடியாத அமெரிக்கா'வை கட்டமைத்தது. 1978ஆம் ஆண்டு, பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்ட பின் சீனாவில் ஏற்பட்ட வளச்சிக்கு பின், சீனாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றியுள்ளன.
1990களில் உலகளாவிய உற்பத்தியின் மதிப்பில் மூன்று விழுக்காட்டிற்கும் குறைவாக உற்பத்தியையே சீனா செய்தது. இன்று சர்வதேச அளவில் சுமார் 25 விழுக்காடு உற்பத்தி சீனாவிலிருந்துதான் வருகிறது. அந்த அளவுக்கு சீனா வளர்ந்துள்ளது. 1985இல் அமெரிக்காவுடன் 600 மில்லியன் டாலர்களாக இருந்த சீனாவின் வர்த்தக உபரி, 2018இல் 420 பில்லியன் டாலர்களைத் தாண்டியது. இந்நிலையில்தான், 2016ஆம் ஆண்டு, அமெரிக்கா சீனா வர்த்த கொள்கை முறையற்று உள்ளதாக அறிவித்து, அதற்கான தீர்வை 100 நாள்களில் உருவாக்க வேண்டும் என்று ட்ரம்ப் கூறினார்.