கரோனா தொற்றின் தாக்கம் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. இந்த வைரஸ் பரவலுக்கு மருந்து கண்டுபிடிக்கவும் வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதை தெரிந்துகொள்ளவும் உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
கரோனா பரவல் குறித்து மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை மற்றும் குழந்தைகளுக்கான மாஸ் பொது மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய விரிவான ஆய்வில், முன்பு கணிக்கப்பட்டதைவிட இளைஞர்கள் மூலம் கரோனா அதிகளவில் பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்த குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் என மொத்தம் 192 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் 49 பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது. மேலும், 18 பேருக்கு தாமதமாக இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அறிகுறிகள் தென்படாத குழந்தைகளும் தங்கள் சுவாச பாதையில் அதிக அளவு கரோனா வைரஸை சுமப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கரோனா பாதிப்பின் வீரியத்திற்கும் வயதிற்கும் தொடர்பில்லை. இதன் காரணமாக வைரஸ் பரவல் வேகம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.