சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த ஸ்ரீ குருநானக் தேவின் 551ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சீக்கியர்களின் புனித நாளாக கருதப்படும் குருபுராப் விழாவை முன்னிட்டு, கனடா நாடாளுமன்ற உறுப்பினர் பார்திஷ் சாக்கர் ஏற்பாடு செய்த முகநூல் நேரலை நிகழ்வில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்று பேசினார்.
அந்நிகழ்வில் பேசிய அவர், “அமைதி வழியில் எதிர்ப்பைப் பதிவு செய்யும் உரிமையைப் பாதுகாக்க கனடா எப்போதும் துணையிருக்கும். வேளாண் சட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிவரும் விவசாயிகள் குறித்து இந்தியாவில் இருந்து வெளிவரும் செய்திகளை அறிந்துள்ளேன். அவற்றை நான் நினைவில் கொண்டிருக்கிறேன். அங்கு நிலவும் நிலைமை பற்றி நாங்கள் கவலைக் கொண்டுள்ளோம். அவர்களது அனைவரது குடும்பம் மற்றும் நண்பர்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறோம். எங்களின் மனநிலை உங்களில் பலருக்கு நன்கு தெரியும். அமைதி வழியில் எதிர்ப்பைப் பதிவு செய்யும் உரிமையைப் பாதுகாக்க கனடா எப்போதும் துணையிருக்கும் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
உரையாடலின் தேவையை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். அதனால்தான் நாங்கள் அதை அடைய வேண்டுமென எங்களது கவலைகளை இந்திய அலுவலர்களுக்கு நேரடியாக பல வழிகளில் வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.
கனடா பிரதமரின் கருத்திற்கு சிவசேனா மாநிலங்களவை எம்.பி., பிரியங்கா சதுர்வேதி நன்றித் தெரிவித்துள்ளார்.