பிரேசில் நாட்டின் முன்னாள் தலைநகரான ரியோ-டி-ஜெனிரோவில் ஆண்டுதோறும் நடைபெறும் 'ரியோ கார்னிவல்' உலக அளவில் மிகப்பெரிய நடனத் திருவிழாவாகும். வண்ணமயமான அலங்கார விளக்குகள், வான வேடிக்கைகள் பேண்டு வாத்தியங்கள் என - ஆறு நாட்களும் - நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். சுமாராக நாளொன்றுக்கு 20 லட்சம் மக்கள் வீதிகளில் திரண்டு வந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என, உற்சாகம் பொங்க கேளிக்கைகளில் ஈடுபடுவர்.
கண்களுக்கு விருந்தளித்த உலகின் மிகப்பெரிய நடனத் திருவிழா! - பிரேசில்
பிரேசில்: ரியோ கார்னிவல் எனப்படும் - உலகின் மிகப்பெரிய நடனத் திருவிழா, ரியோ-டி-ஜெனிரோவில் கோலாகலமாக நடைபெற்றது. வருடாந்திரத் திருவிழாவான இது, இந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் நடைபெற்றது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஆறு நாட்கள் களைகட்டிய திருவிழா பற்றிய ஒரு பார்வை...
பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ராட்சத வாகனங்களின் அணிவகுப்பின் ஒரு பகுதியாக சாகச நிகழ்ச்சிகளும் நடந்தன. ஒரே மாதிரி உடையணிந்த பல்வேறு குழுக்கள் விதவிதமாக - உற்சாகமாக நடனமாடி ஆர்ப்பரித்ததைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வண்ண வண்ண பலூன்களை கையில் தாங்கி குழந்தைகளும் கூட உற்சாகம் பொங்க நடனமாடினர்.
ஆண்டுதோறும் ஈஸ்டருக்கு 51 நாட்களுக்கு முன்பு தொடங்கி, தொடர்ச்சியாக 6 நாட்கள் இத்திருவிழா நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பொதுமக்கள் அழகழகாக அலங்கரித்துக்கொண்டு வீதிகளில் ஆனந்தக் கூத்தாடுவதைக் காண, உலகெங்கிலும் இருந்து ஏராளமானோர் இந்நகருக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற நடன விழாவின் தாக்கங்கள் அடுத்த ஆண்டு விழா வரை இம்மக்களின் நினைவில் நிழலாடும் என்றால் அது மிகையில்லை.